பெரம்பலூர் ரோவர் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா: பாரம்பரிய உணவுத் திருவிழா கோலாகலம்

பெரம்பலூர், டிச. 10: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பாரம்பரிய உணவுத் திருவிழா’ இன்று (புதன்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. V.சந்திரசேகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி விழாவைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், “பாரம்பரியம் என்பது நம் அடையாளம்; உணவு நம் வாழ்வின் ஆதாரம். பாரதியார் வலியுறுத்திய சுயநிறைவு மற்றும் பண்பாட்டைக் காக்கும் வகையில், இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும், நாட்டுப்புறச் சுவைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில் மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று, பொங்கல், கம்பங்குழம்பு, கேழ்வரகு அடை, வரகு உப்புமா, குதிரைவாலி பாயசம், திணை லட்டு மற்றும் எள்ளுருண்டை உள்ளிட்ட பல்வேறு சத்தான பாரம்பரிய உணவுகளைத் தங்கள் கைகளாலேயே தயாரித்து காட்சிப்படுத்தினர். மேலும், ஒவ்வொரு உணவின் மருத்துவ குணங்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள் குறித்தும் அவர்கள் விளக்கமளித்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உணவுகளை ருசித்து, மாணவிகளின் திறமையைப் பாராட்டினர். பாரதியாரின் பிறந்த நாளில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு. எஸ்.பரமசிவன், திரு. வி.ரமேஷ் மற்றும் திருமதி. பி.நிர்மலா ஆகியோர் செய்திருந்தனர்.